கோண்டாவில் வன்முறை – சந்தேகநபர்களுக்கு பிணை!
கோண்டாவிலில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக கைதான சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் ஒருவருடைய கை துண்டாடப்பட்டும் ,மேலும் அறுவர் படுகாயமடைந்ததுமான வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஊடாக முற்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு பிணை வழங்க பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் சரணடைந்த இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது
கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி கோண்டாவில் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்து அங்கிருந்த 7 பேரை ஆயுதங்களால் தாக்கி காயம் விளைவித்தும், வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை சேதப்படுத்தியும், தீ வைத்தும் வன்முறை மேற்கொள்ளப்பட்டது என
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் கோப்பாய் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நால்வர் யாழ். குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் நால்வரும் கடந்த ஜூலை 5ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அத்தோடு அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
ஆனால் கொரோனாத் தொற்று காரணமாக இவர்கள் நால்வரும் கடந்தமாதம் 19ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய 3 முக்கிய சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் அவர்களை பிணையில் விடுவிக்க கோரி சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.
பிணை விண்ணப்பத்துக்கு கோப்பாய் பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காததால் . 3 சந்தேக நபர்களையும் தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .