திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசம் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (19) மாலை முதல் மன்னம்பிட்டி ஊடாக மகாவலி கங்கையில் அதிகளவு நீர் வரத்தொடங்கியுள்ளது. இந்த மேலதிக நீர் வரத்து தற்போது வெருகல் பிரதேசத்தை வந்தடைந்துள்ளதால் இப்பகுதியில் வெள்ள நிலைமை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
வெருகல் பிரதேசத்தின் உள்ளக வீதிகள் மட்டுமன்றி, பிரதான வீதியும் வெள்ள நீரால் மூடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகத் தடைப்பட்டுள்ளன. தாழ்நிலப் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.
மகாவலி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் வெருகல் பிரதேசவாசிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.