வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி பல ஆண்டுகளாகப் போராடி வந்த தந்தை ஒருவர், தனது மகனை மீண்டும் காணாமலேயே சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த வையாபுரி சந்திரன் (69 வயது) என்ற தந்தை ஆவார். இவரது மகனான ஜெயகாந்தன், கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
கடந்த 17 வருடங்களாகத் தனது மகனுக்கு என்ன நடந்தது என்பதை அறிய சந்திரன் அவர்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வந்தார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டங்களில் இவர் ஒரு தீவிரப் பங்காளராகக் கலந்துகொண்டார்.
எப்படியாவது தனது மகனைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற ஏக்கத்துடன் வீதிப் போராட்டங்களில் ஈடுபட்ட இவர், முதுமை மற்றும் சுகவீனம் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் தனது போராட்டத்தைக் கைவிடவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் உண்மையை அறியும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்களில், பல தந்தைமார்களும் தாய்மார்களும் தமது பிள்ளைகளைக் காணாமலேயே உயிரிழந்து வரும் வரிசையில் சந்திரனும் தற்போது இணைந்துள்ளார்.
இவரது இறுதிச் சடங்குகள் நேரியகுளம் பகுதியில் நடைபெறவுள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமது அஞ்சலிகளையும் இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.