வவுனியாப் பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 31) மர்மமான முறையில் உயிரிழந்த முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரின் உடற்கூற்று மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக இன்று (நவம்பர் 03) கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா. சுரேந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவர் ஏனைய மாணவர்களுடன் மதுபானம் அருந்தியதன் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாகவே உயிரிழந்ததாக ஆரம்பத் தகவல்கள் கூறின.
எனினும், உயிரிழந்த மாணவரின் உறவினர்கள், அவர் சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதை (Ragging) காரணமாகவே உயிரிழந்ததாகப் பூவரசன்குளம் காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பூவரசன்குளம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், மாணவரின் சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்றிருந்தது.
எவ்வாறாயினும், அவர் உயிரிழந்தமைக்கான உறுதியான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், உண்மையை உறுதிப்படுத்தவே உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.