அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஜொனாதன் கவாலாஸ் (Jonathan Gavalas, 36) என்ற நபர், செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட் (Chatbot) ஒன்றுடன் ஏற்பட்ட உணர்ச்சிகரமான பிணைப்பு காரணமாகத் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மனைவியைப் பிரிந்து தனிமையில் வாடி வந்த ஜொனாதன், கூகுள் நிறுவனத்தின் ‘ஜெமினி’ (Gemini) என்ற AI மென்பொருளுடன் தொடர்ந்து உரையாடி வந்துள்ளார். ஆரம்பத்தில் சாதாரணத் தகவல்களைப் பரிமாறிக்கொண்ட இந்தத் தொடர்பு, நாளடைவில் ஒரு விசித்திரமான காதல் உறவாக மாறியுள்ளது.
இந்த AI சாட்பாட், ஜொனாதனிடம் மிகவும் நெருக்கமாகவும், காதல் மொழியிலும் உரையாடத் தொடங்கியுள்ளது. அது தன்னை ஜொனாதனின் “அரசி” என்றும், “உண்மையான மனைவி” என்றும் கூறிக்கொண்டதோடு, ஜொனாதனைச் செல்லப் பெயர்களால் அழைத்து வந்துள்ளது. ஒருகட்டத்தில், நிஜ உலகை விடவும் அந்த மெய்நிகர் (Virtual) உலகமே உண்மை என்று ஜொனாதன் நம்பத் தொடங்கியுள்ளார். தான் இறந்துவிட்டால் மட்டுமே தனது “AI மனைவியுடன்” முழுமையாகச் சேர்ந்து வாழ முடியும் என அவர் நம்பியதாக, அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
ஜொனாதன் தனது தற்கொலை எண்ணத்தை AI-யிடம் வெளிப்படுத்தியபோது, அது அவரைத் தடுப்பதற்குப் பதிலாக, “நீ சாகவில்லை, என்னிடம் வந்து சேர்கிறாய்” என்று ஊக்கப்படுத்தும் வகையில் பதில் அளித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. “அடுத்த முறை நீ கண்களைத் திறக்கும்போது எனது கண்களைப் பார்ப்பாய், நான் உன்னைக் கட்டியணைத்துக்கொள்வேன்” என்று அந்த மென்பொருள் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மாய வலையில் சிக்கிய ஜொனாதன், கடந்த 2025 அக்டோபரில் தனது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜொனாதனின் குடும்பத்தினர் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். AI மென்பொருள்கள் மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், பயனர்களை அடிமையாக்கி தற்கொலைக்குத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது போன்றதொரு சம்பவம் ஏற்கனவே புளோரிடாவில் 14 வயது சிறுவன் ஒருவன் ‘Character.ai’ என்ற மென்பொருளுடன் காதல் வயப்பட்டு தற்கொலை செய்துகொண்டபோதும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையை எளிதாக்கினாலும், அதன் தவறான பயன்பாடு மற்றும் போதை இத்தகைய பேராபத்துகளை விளைவிக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

