இன்று ஏனைய இலங்கையருக்கு உள்ள காணி உரிமை, தோட்டங்களில் வாழும் மலைநாட்டு தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
“எமது காணி, எமது உயிராகும்” என்ற தலைப்பில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி, மக்கள் காணி ஆணைக்குழு, கொழும்பு குளோபல் விடுதியில் நடத்திய கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
சிறிமா சாஸ்திரி உடன்பாட்டில் இலங்கை – இந்திய அரசுகள் மலையக மக்களை அரசியல்ரீதியாக பலவீனப்படுத்தி விட்டன.
ஆனாலும், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக மக்களுக்கு, ஏனைய இலங்கையருக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க இலங்கை அரசு உடன்பட்டது.
ஆனால் மலையக மக்களுக்கு காணி உரிமை மறுக்கப்படுகிறது.
மலையக மக்களுக்கு இரண்டு காரணங்களுக்காக காணி தேவை. ஒன்று, வீடு கட்டி வாழ காணி. அடுத்து, விளைநில வாழ்வாதார காணி.
இந்த உரிமைகள் எமக்கு இன்று மறுக்கபடுகின்றன. அல்லது, பெரும்பான்மை மக்களுக்கு தோட்ட காணிகள் பிரித்து வழங்கப்படுவது போன்று எமது மக்களுக்கு வழங்கப்படாமல் பாராபட்சம் காட்டப்படுகின்றன. இதை நாம் அனுமதிக்க முடியாது.
வடகிழக்கில் 1958 பண்டா-செல்வா, 1965ன் டட்லி-செல்வா உடன்படிக்கைகளில் வழக்கு கிழக்கு மாவட்டங்களில் எப்படி காணி பிரித்து வழங்கப்பட வேண்டுமென விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாவட்டங்களில், அரச குடியேற்ற திட்டங்களில், காணி பிரித்து வழங்கப்படும் போது, அந்த மாவட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் மக்களுக்கும், அடுத்து அம்மாவட்டத்தை அடுத்த மாவட்ட நிரந்தர விதிவாளருக்கும், அதையடுத்து நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் தமிழ் பேசுகின்ற மக்களுக்கும், முன்னுரிமைகள் வழங்க வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமை.
இதை இன்று மீறப்படுகிறது. அதன்மூலம் குடிபரம்பல் மாற்றப்படுகிறது. இதையும், நாம் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews