கொழும்பு, கொள்ளுப்பிட்டி மரைன் டிரைவ் (Marine Drive) கடல் பகுதியில் இருந்து அடையாளம் காணப்படாத நிலையில் சடலமொன்று இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை மரைன் டிரைவ் கடற்கரைப் பகுதியில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கினர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் ஆணா அல்லது பெண்ணா என்பது கூட இதுவரை உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சடலம் நீண்ட நேரம் நீரில் இருந்தமையால் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் யார்? இது தற்கொலையா அல்லது கொலையா? என்பது குறித்துக் கண்டறிய கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சடலம் பிரேத பரிசோதனைக்காகவும், அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.