நாட்டிலுள்ள பாடசாலைகளின் உணவகங்களில் (Canteens) ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் எளிதில் கிடைப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தயாரித்த “Strengthening Nutrition in Schools in Sri Lanka” என்ற தலைப்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான பாடசாலை உணவகங்களைப் பராமரிப்பதற்கான அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் தீவிரமாக மீறப்படுவதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 70 பாடசாலைகளில், 91% பாடசாலை நிர்வாகிகளுக்கு ‘ஆரோக்கியமான சிற்றுண்டிச்சாலைகளைப் பராமரிப்பதற்கான வழிகாட்டுதல்கள்’ பற்றித் தெரிந்திருந்தாலும், 34% பாடசாலைகள் மட்டுமே இந்த வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றுவதாகத் தெரியவந்துள்ளது.
அதிக சீனி, உப்பு அல்லது கொழுப்புள்ள உணவுகள் பாடசாலைகளில் விற்பனை செய்யக் கூடாத சூழலில், அதிக எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுகள் விற்பனை செய்யப்படுவது ஒரு முக்கியப் பிரச்சினையாகும்.
கண்காணிக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலைகளில், 83% இல் எண்ணெய்யில் பொரித்த உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் 51% சிற்றுண்டிச்சாலைகளில் அதிக இனிப்புள்ள உணவுகளும், 38% இல் அதிக உப்புள்ள உணவுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆரோக்கியமான தேர்வாகக் கருதப்படும் புதிய பழங்கள் வெறும் 12% பாடசாலை உணவகங்களில்தான் கிடைக்கின்றன.
உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்து மட்டுமின்றி, அந்த உணவகங்களின் சுகாதார நிலையும் சமநிலையற்றதாக இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. 55% சிற்றுண்டிச்சாலைகளில் மட்டுமே சுத்தமான மேசைகள் மற்றும் சேவை செய்யும் இடங்கள் காணப்பட்டுள்ளன. உணவு வழங்குபவர்கள் பொருத்தமான பாதுகாப்புக் கருவிகளை அணிந்திருந்தது 43% மட்டுமே ஆகும்.
2025 ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய சிற்றுண்டிச்சாலை வழிகாட்டுதல்களைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவும் மற்றும் கண்காணிக்கவும் வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.