இந்தியாவிலிருந்து இலங்கை ஏதிலிகள் தாயகம் திரும்புதல்: தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்பும் பணிகள் மீண்டும் ஆரம்பம் – UNHCR அறிவிப்பு!

25 690c6471b9451

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை ஏதிலிகள் தன்னார்வ அடிப்படையில் தாயகம் திரும்பும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பு (UNHCR) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்புடன் இணைந்து செயல்பட்டு வருவதாக, இந்தியாவில் உள்ள ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரக தலைவர் அரெட்டி சியென்னி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தன்னார்வ அடிப்படையில் இலங்கைக்குத் திரும்பிய நான்கு தமிழர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து ஏதிலிகள் தாயகம் திரும்பும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டு 200 இலங்கை ஏதிலிகள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பியதாகவும், இந்த ஆண்டு சுமார் 50 பேர் ஆர்வம் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை, நாடு திரும்புதல் அல்லது மீள்குடியேற்றம் மூலம் ஏதிலிகளுக்கு நீடித்த தீர்வுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகளுடன் UNHCR தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் சியென்னி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது 80,000 க்கும் மேற்பட்ட இலங்கை ஏதிலிகள் தங்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டில் வசித்து வருகின்றனர்.

2002ஆம் ஆண்டு முதல், 18,643 ஏதிலிகள் தன்னார்வ நாடு திரும்பும் திட்டத்தின் கீழ் இலங்கைக்குத் திரும்பியுள்ளனர்.

Exit mobile version