பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, 60-க்கும் மேற்பட்ட தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த வார இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ‘குழந்தைகள் நல்வாழ்வு மற்றும் பாடசாலைகள் சட்டமூலத்தில்’ (Children’s Wellbeing and Schools Bill) இதற்கான திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், 16 வயதுக்குட்பட்டவர்களின் கணக்குகளை முடக்குவதற்கும் புதிய பதிவுகளைத் தடுப்பதற்கும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படும்.
பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி பயன்பாடு குறித்த கொள்கைகளை மறுஆய்வு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.பிள்ளைகளின் ‘திரை நேர’ (Screen Time) மேலாண்மை குறித்து பெற்றோருக்கான புதிய வழிகாட்டுதல்கள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிடப்படும்.
சிறுவர்களின் மனநலனைப் பாதுகாப்பதற்காக ஆஸ்திரேலியா சமீபத்தில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சமூக ஊடகத் தடையை விதித்தது. அதனைப் பின்பற்றி தற்போது பிரித்தானியாவும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.