சுவிட்சர்லாந்தின் செங்காளன் (St. Gallen) நகரமன்றத்தின் தலைவராக (Stadtparlament-Präsident), ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சமூகநலச் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் நேற்று (20) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
1988 ஆம் ஆண்டு, தனது 18 ஆவது வயதில் கையில் ஒரு பையோ, கல்வியோ அல்லது எவ்வித ஆவணங்களோ இன்றி ஒரு அகதியாகச் சுவிட்சர்லாந்திற்குள் காலடி வைத்தார் ஜெயக்குமார்.
யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த இவர், கோண்டாவில் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவார். 2011 இல் சுவிஸ் குடியுரிமை பெற்ற இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பசுமைக் கட்சி (Green Party) சார்பில் நகரமன்ற உறுப்பினராகச் செயற்பட்டு வருகிறார்.
பாராளுமன்ற அவையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வு தமிழர் கலாச்சாரத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் அமைந்தது.
அவையில் திருக்குறளை மூன்று முறை முன்மொழிந்த ஜெயக்குமார், அதன் பொருளை டச் (Dutch) மொழியில் அங்கிருந்த உறுப்பினர்களுக்கு விளக்கினார்.அவையரங்கில் தமிழர் பண்பாட்டு இசை ஒலிக்கவிடப்பட்டதுடன், விருந்தினர்களுக்குத் தமிழ் பாரம்பரியச் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டமை அனைவரையும் கவர்ந்தது.
தற்போது 56 வயதாகும் ஜெயக்குமார், செங்காளன் நகரில் வசிக்கும் சுவிஸ் குடியுரிமை இல்லாத 30% மக்களுக்காகவும், இனப் பாகுபாட்டிற்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். “தன்னைப் போலவே எவ்வித ஆதாரமுமின்றி வரும் அகதிகளின் வாழ்வை மேம்படுத்துவதே தனது இலக்கு” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ஈழத்தமிழர் ஒருவர் ஐரோப்பிய நாடொன்றின் நகரமன்றத் தலைவராக உயர்ந்திருப்பது உலகவாழ் தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.