ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏமனில் தாம் முன்னெடுத்து வந்த “பயங்கரவாத எதிர்ப்பு” நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாக அபுதாபி தெரிவித்துள்ளது.
ஏமனில் உள்ள பிரிவினைவாதக் குழுக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் இரகசியமாக ஆதரவு அளிப்பதாகச் சவுதி அரேபியா அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது. இது சவுதி தலைமையிலான கூட்டணிப் படைகளுக்குள் பாரிய விரிசலை ஏற்படுத்தியது.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசாங்கம், 24 மணி நேரத்திற்குள் ஐக்கிய அரபு அமீரகப் படைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதற்குச் சவுதி அரேபியாவும் தனது ஆதரவை வழங்கியது.
இந்த வெளியேற்ற அறிவிப்பு வெளியாவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னர், சவுதி தலைமையிலான கூட்டணிப் படைகள் ஏமனின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முகாலா (Mukalla) துறைமுக முகாமை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தின.
ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த வெளியேற்றமானது, ஏமன் உள்நாட்டுப் போரில் ஒரு முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது. இது சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பிராந்திய உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.