மட்டக்களப்பில் அட்டகாசம்: புகைப்படக் கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு சி.ஐ.டி அதிகாரிகள் உட்பட நால்வர் கைது!

1562298412 Four arrested for assaulting traffic cops at Batticaloa L

மட்டக்களப்பு நாவலடி கடற்கரைப் பகுதியில், தவறவிட்ட கமரா பையைத் தேடிச் சென்ற புகைப்படக் கலைஞர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CID) அதிகாரிகள் இருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை நாவலடி கடற்கரையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த கல்லடியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் குழுவினர், தவறுதலாகத் தமது பெறுமதியான கமரா மற்றும் உபகரணங்கள் அடங்கிய தோல்பையை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.

அன்றைய தினம் இரவு 8 மணியளவில் மீண்டும் அந்த இடத்திற்குச் சென்று டார்ச் லைட் (Torch Light) வெளிச்சத்தில் பையைத் தேடியுள்ளனர்.

அப்போது அங்கிருந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் மீது எதிர்பாராதவிதமாக டார்ச் லைட் வெளிச்சம் பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர், “நாங்கள் சி.ஐ.டி அதிகாரிகள், ஏன் எங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சினாய்?” எனக் கேட்டுத் தர்க்கத்தில் ஈடுபட்டு, புகைப்படக் கலைஞர்களைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த புகைப்பட நிறுவன உரிமையாளர் மற்றும் ஏனைய கலைஞர்கள் மீதும் குறித்த குழுவினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு அஞ்சி கலைஞர்கள் தமது கைத்தொலைபேசிகள் மற்றும் கமராக்களை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இரு அதிகாரிகள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரத்தைப் பயன்படுத்திச் சாதாரணப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்தச் சம்பவம் மட்டக்களப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version