அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மீன்பிடித் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியான திலிபன ஜெயசூரிய மற்றும் முன்னாள் வீட்டுவசதி மற்றும் கட்டுமான பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்கவின் பணியாளரான இந்திக பண்டார விஜேசுந்தர ஆகியோரே கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
துறைமுக அதிகாரசபையில் தொழிலாளர் பதவியைப் பெறுவதற்காக சந்தேக நபர்கள் ஐந்து இலட்சம் ரூபாயை கோரியதாகவும், முன்னதாக இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயையும், தொழில் கிடைத்ததும் 2 இலட்சம் ரூபாயை கோரியதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

