தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது கட்சியின் முதல் தேர்தல் அறிக்கையை நேற்று (ஏப்ரல் 16) சென்னையில் வெளியிட்டார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், விவசாயி நாராயணன் என்பவரிடம் முதல் பிரதியை வழங்கிய விஜய், “மக்களால் செய்ய முடிந்தவற்றை மட்டுமே நாங்கள் வாக்குறுதிகளாக அளித்துள்ளோம்” என்று கூறி, திராவிடக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மக்களை ஏமாற்றுவதாகக் குற்றம் சாட்டினார்.
இந்தத் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ‘வெற்றி மகளிர் திட்டம்’ மூலம் 60 வயதுக்குட்பட்ட குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் மாதம் 2,500 ரூபாய் வரவு வைக்கப்படும் என்றும், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் கல்வி இடைநிற்றலைத் தடுக்கத் தாயாருக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் உதவித்தொகை மற்றும் 12-ஆம் வகுப்பிற்குப் பிறகு மாணவர்கள் உயர்கல்வி கற்க 20 லட்சம் ரூபாய் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும் போன்ற அதிரடி வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருப்பவர்களுக்குப் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு 3,500 ரூபாயும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4,500 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் 4,000 ரூபாய் ஊக்கத்தொகை, ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி மற்றும் உதவித்தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் ஆகியவையும் இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களாகும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் 25 லட்சம் ரூபாய் வரையிலான குடும்ப மருத்துவக் காப்பீடு போன்ற மக்கள் நலத் திட்டங்களை விஜய் முன்மொழிந்துள்ளார். தமிழகத்தை இந்தியாவின் ‘AI தலைநகராக’ மாற்றும் நோக்கில் தனி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்றும், அரசு நிர்வாகத்தில் லஞ்சத்தை ஒழிக்க வெளிப்படையான பதவி உயர்வு முறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். திருக்குறளின் அறநெறிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த விஜய், தனது கட்சி ஒரு புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

