நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தியில், கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அஜிதா ஆக்னல் என்பவர், தான் எதிர்பார்த்த மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத காரணத்தினால் அதிகளவிலான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.
உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி ரீதியாக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களைக் கட்சித் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக நியமித்து வருகிறார்.
முன்னதாக, தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவி வேறொருவருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்து, அதிருப்தியடைந்த ஆதரவாளர்கள் தலைவர் விஜய் பயணித்த காரை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும் பதிவாகியிருந்தது.
கட்சியின் புதிய நியமனங்களைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இவ்வாறான உட்கட்சிப் பூசல்கள் மற்றும் எதிர்ப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.