அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் ஏதேனும் மீறல்கள் ஏற்பட்டால், இதுவரை உலகம் கண்டிராத வகையிலான மிகக் கடுமையான இராணுவப் பதிலடி வழங்கப்படும் என அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் எச்சரித்துள்ளார்.
“உண்மையான ஒப்பந்தம் முழுமையாகப் பேணப்படும் வரை, அமெரிக்கக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் இராணுவ வீரர்கள் இப்பகுதியிலேயே இருப்பார்கள். ஒப்பந்தம் மீறப்பட்டால், முன்னெப்போதையும் விட வலிமையான தாக்குதல்கள் தொடங்கும்” என டிரம்ப் பதிவிட்டுள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்றும், ஹோர்முஸ் ஜலசந்தி பாதுகாப்பாகத் திறந்திருக்கும் என்றும் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். “அமெரிக்கா மீண்டு வந்துவிட்டது!” என்ற பிரகடனத்துடன் அவர் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட இந்த இரண்டு வார காலப் போர்நிறுத்தம், கடந்த ஆறு வாரங்களாக நீடித்த மோதல்களுக்குத் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஒரு சிறிய நிம்மதி ஏற்பட்டுள்ள போதிலும், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்புத் தொடர்பில் இன்னும் முழுமையான தெளிவு ஏற்படவில்லை. தனது ஆயுதப் படைகளுடனான ஒருங்கிணைப்பைப் பொறுத்தே கப்பல் போக்குவரத்து அமையும் என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தப் போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது என இஸ்ரேல் அறிவித்துள்ளதுடன், புதன்கிழமை அன்று லெபனான் மீது நடத்திய மிகக் கடுமையான தாக்குதல்களில் 182 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஈரான், இத்தகைய சூழலில் அமெரிக்காவுடன் நிரந்தர அமைதி ஒப்பந்தம் குறித்துப் பேசுவது “நியாயமற்றது” எனக் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், திட்டமிட்டபடி இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

