சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற முக்கியச் சந்திப்பை அடுத்து, சீனா மீதான வரி விதிப்பு 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து பேசிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்காவுடனான உறவுகள் குறித்து முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். “வலுவான சீனா மற்றும் அமெரிக்க உறவுகளை உறுதி செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக, சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்று நான் பலமுறை பொதுவில் கூறியுள்ளேன்.
டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், சீனா மற்றும் அமெரிக்க உறவுகள் ஒட்டுமொத்தமாக நிலையுள்ளதாகவே உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். உலகின் இரண்டு முன்னணி பொருளாதார நாடுகளுக்கு இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுவது இயல்பானது என அவர் எடுத்துரைத்தார்.
இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க, ட்ரம்ப்புடன் தொடர்ந்து பணியாற்றத் தான் தயாராக இருப்பதாகவும் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தை, உலக வர்த்தக உறவுகள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
