உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

image 1d03fce287

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக நீக்கக் கோரி, வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் ஒரு லட்சம் கையெழுத்துகளைப் திரட்டும் விசேட போராட்டம் நேற்று (14) திருகோணமலையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

திருகோணமலையில் இடம்பெற்ற ‘ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று’ அங்குராற்பண நிகழ்வின் போது இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் மற்றும் மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் தமது முதற்கட்ட கையொப்பங்களை இட்டு போராட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளின் கூட்டிணைவில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டம் எதிர்வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி வரை தொடரவுள்ளது. சேகரிக்கப்படும் ஒரு லட்சம் கையெழுத்துக்களின் பிரதிகள் நீதி அமைச்சு (இலங்கை அரசாங்கம்), ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சர்வதேச நாணய நிதிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

அரசாங்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்படும் புதிய சட்ட முன்மொழிவுகள் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஐ சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே இச்சட்டத்தை முற்றாக ஒழிக்க முடியும் என வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

 

 

Exit mobile version