அம்பாறை, சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கபூர் வீதிப் பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் இன்று (09) காலை தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (08) இரவு வழமை போல உறங்குவதற்காகச் சென்ற மாணவன், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தவறான முடிவெடுத்துத் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த மாணவன் கடந்த 6 மாதங்களாகக் கடுமையான மன அழுத்தத்தினால் (Depression) பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக முறையான மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்று வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த சாய்ந்தமருது பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி மரண விசாரணைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
மாணவனுக்கு மன அழுத்தம் ஏற்பட்டமைக்கான உண்மையான காரணம் என்ன?
மரணத்தில் வேறு ஏதேனும் சந்தேகங்கள் உள்ளனவா? என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இளம் வயதினர் மத்தியில் அதிகரித்து வரும் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் குறித்துப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.