கனடாவின் டொரோண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மணிநேரம் நீடித்த உறைபனி மழையைத் (Freezing Rain) தொடர்ந்து, தற்போது பாரிய பனிப்பொழிவு ஏற்படும் என கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் (Environment Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில பகுதிகளில் ஒரு மணித்தியாலத்திற்கு 2 முதல் 5 சென்டிமீட்டர் வரை பனி பொழியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீதிகளில் பார்வைத்திறன் (Visibility) வெகுவாகக் குறையும்.
மோசமான வானிலை காரணமாக யோர்க் மற்றும் ஹால்டன் பிராந்தியங்களில் பாடசாலை பேருந்து சேவைகள் மற்றும் ஏனைய பொதுப் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பாடசாலைகள் வழமை போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்டாரியோ மாகாண காவல்துறையினர் (OPP) வாகனச் சாரதிகளுக்குப் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர், வாகனங்களைச் செலுத்தும் போது முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரச் செய்யவும்.
வேகத்தைக் குறைத்து, முன்னால் செல்லும் வாகனத்திற்கும் உங்களுக்கும் இடையில் பாதுகாப்பான இடைவெளியைப் பேணவும்.
வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
வோன் மற்றும் மார்க்கம் போன்ற நகரங்களில் வீதிகளில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், ஐஸ் படிவுகள் காரணமாகச் சாதாரண நேரத்தை விட அதிக காலம் எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் குளிரால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக டொரோண்டோ மாநகர சபையினால் 5 அவசர வெப்பமூட்டும் மையங்கள் (Warming Centres) திறந்து வைக்கப்பட்டுள்ளன.