1 கோடி ரூபா மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கைது!

arast 4

இணையத்தளம் வாயிலாகத் தளபாடங்கள் (Furniture) வழங்குவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மேல் மாகாண (தெற்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சகோதரிகள், மற்றவர் அவர்களது மைத்துனி (நாத்தனார்) ஆவார். இவர்கள் திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களிடமிருந்து ஒரு கைத்தொலைபேசி, இரண்டு தனியார் வங்கி விசா (Visa) அட்டைகள் மற்றும் 87,000 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையப்பக்கங்களில் கவர்ச்சிகரமான விலையில் தளபாடங்கள் விற்பனைக்கு இருப்பதாக இவர்கள் விளம்பரங்களைப் பதிவிட்டுள்ளனர். இதனை நம்பி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முன்பணம் செலுத்திய நபர்களுக்கு, தளபாடங்களை வழங்காமல் ஏமாற்றி பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். இவ்வாறு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இவர்கள் மோசடி செய்திருப்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மிரிஹான பொலிஸாருக்குக் கிடைத்த பல முறைப்பாடுகளைத் தொடர்ந்து, மேல் மாகாண (தெற்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை மேற்கொண்டு இவர்களைக் கைது செய்தனர். இணையம் வழியாகப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது, முன்பணம் செலுத்துவதில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

 

 

Exit mobile version