அருட் தந்தை மிலன் பிரியதர்ஷன மீதான தாக்குதல்: 3 காவல்துறை அதிகாரிகள் அடையாள அணிவகுப்பில் சிக்கினர்!

Negombo silence protest iii

அருட் தந்தை மிலன் பிரியதர்ஷன (Rev. Fr. Milan Priyadarshana) அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில், மூன்று காவல்துறை அதிகாரிகள் இன்று (29) பாதிக்கப்பட்ட அருட் தந்தையினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா பிரதான நீதவான் சீலானி பெரேராவின் உத்தரவின் பேரில், கம்பஹா நீதிமன்றத்தில் இன்று அடையாள அணிவகுப்பு (Identification Parade) நடைபெற்றது.

சந்தேக நபர்களாக நிறுத்தப்பட்ட ஆறு காவல்துறை அதிகாரிகளில், மூன்று பேரை அருட் தந்தை மிலன் பிரியதர்ஷன சரியாக அடையாளம் காட்டினார்.

அடையாளங்காணப்பட்ட மூன்று அதிகாரிகளையும் தலா 500,000 ரூபா தனிப்பட்ட பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

முன்னதாக, அருட் தந்தை மீதான இத்தாக்குதலைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை (27) நீர்கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது:

அருட் தந்தையர்கள், அருட் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் இதில் திரளாகக் கலந்துகொண்டனர்.நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் இருந்து சிலாபம் பிரதான வீதி ஊடாக தெல்வத்தை சந்தி வரை அமைதியான முறையில் பேரணி நடத்தப்பட்டது.

காவல்துறையினரின் அராஜகப் போக்கைக் கண்டித்தும், மதகுருமார்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நீதி கோரியும் சுலோக அட்டைகளை ஏந்திப் போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு, மதகுருமார்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

 

Exit mobile version