மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவு வளைவு உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று (அக்டோபர் 17) தான் முதல் முறையாக 10 நபர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:
“இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்திலே திருக்கேதீஸ்வர கோயில் வளைவு 2019-ஆம் ஆண்டு உடைத்த சம்பவம் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆறு வருடங்கள் கடந்த நிலையிலேயும் இன்றுதான் முதல் தடவையாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 10 பேருக்கு எதிராக இந்த வழக்கு ஆரம்பமாகியுள்ளது. அதிலே ஒருவர் மரணித்துவிட்டார். மீதம் உள்ள ஒன்பது பேர் விசாரணைக்காக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.