துறைமுக நகரத்தில் எடுக்கப்படும் தனிப்பட்ட செல்பிகள் அல்லது வீடியோக்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமூக ஊடகப்பதிவுகளில் வெளியாகும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்று கொழும்பு துறைமுக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனினும், புதிதாக பொது மக்களுக்காக திறக்கப்பட்ட துறைமுக நகரத்தின் கடற்கரை நடைபாதையைப் பயன்படுத்துவதற்கு பொது மற்றும் தனியார் துறையினரிடமிருந்து முன்னெப்போதும் இல்லாத அளவில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டமையால், தனிப்பட்ட நிகழ்வுகள், தொழில்சார் மற்றும் வணிக நோக்கத்திற்கான படப்பிடிப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றிற்காக கட்டண முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான படப்பிடிப்பு/புகைப்படம் எடுப்பது இடையூறாக இருப்பதாகவும், கடற்கரை நடைபாதைக்கு வரும் பிற பார்வையாளர்களின் அந்தரங்கத்தை மீறுவதாகவும் எங்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் இடம்பெற்றுவரும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில்கொண்டு, துறைமுக நகரத்தில் இதுபோன்ற தொழில்முறை படப்பிடிப்பு அல்லது புகைப்படம் எடுப்பதில் ஈடுபட விரும்பும் எவருக்கும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், தேவைப் படுபவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் இந்த முறைமை அமைப்பு மற்றும் இதற்கென ஒதுக்கப்பட்ட கால அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடற்கரை நடைபாதை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும். கட்டணம் செலுத்திய படப்பிடிப்பையும் புகைப்படம் எடுத்தலையும் காலை 9 மணிக்கு முன் அல்லது வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற பிற நேரங்களில் மேற்கொள்ளலாம்.
துறைமுக நகரத்தினுள் தனிப்பட்ட மொபைல் தொலைபேசிகள் அல்லது கேமராக்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட படங்கள், வீடியோக்கள் மற்றும் செல்ஃபி எடுக்க விரும்புவோருக்கு கட்டணம் எதுவும் கிடையாது என்பதை வலியுறுத்த விரும்புவதாக துறைமுக நகரம் அறிவித்துள்ளது.
#SriLankaNews