முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் தொடர் போராட்டம் ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மகளிர் தினத்தைத் துக்கநாளாகக் கடைப்பிடித்து இன்று முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு – புனித இராஜப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமான போராட்டம், முல்லைத்தீவு பிரதான சுற்றுவட்டப் பாதை வரை ஊர்வலமாக வருகை தந்து நிறைவடைந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் 49ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடர் தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான நீதியைச் சர்வதேச சமூகம் விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் எனக் கோரியும், சர்வதேச மகளிர் தினத்தைத் துக்கதினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைக் கோருகின்ற வகையில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளிலான பாதாதைகளைத் தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும், கறுப்புக்கொடியை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள், சமூகமட்டப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
#SriLankaNews

