வடக்கு மாகாணத்திற்கு வருமானம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே மூடி வைக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு செல்வதற்கென்ற போர்வையில் மக்களின் நிலத்தை அபகரித்து பாதை ஏற்படுத்துவதாக கட்டுவன் நில உரிமையாளர்களில் ஒருவரான ந.லோகதயாளன் தெரிவித்தார்.
கட்டுவன் மயிலிட்டி வீதியில் படையினர் வசமுள்ள 400 மீற்றர் தூரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பார்வையிட்டு டிசெம்பர் மாதம் இடம்பெற்ற பாதுகாப்புச்சபை குழுக்கூட்டத்தில் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளின்படி இவ் வீதியின் விடுவிப்பு சாத்தியமாகியுள்ளது.
பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப செயற்பாடாக இவ் வீதி விடுவிப்பை கருதவேண்டியது அவசியமானது எனத் தெரிவிப்பது தொடர்பில் அந்த இடத்தில் பிரசன்னமான நில உரிமையாளரான ந.லோகதயாளனிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
1990ஆம் ஆண்டு முதல் படைவசமிருந்த நிலம் நீண்ட முயற்சியின் பின்பு நல்லாட்சி அரசியில் பாதி நிலம் விடுவிக்கப்பட்டு மீதி நிலம் கண் பார்வையில் இருக்க இவ்வாறு கண்ணுக்குத் தெரியும் நிலத்தையும் மீட்க பல முயற்சிகளை மேற்கொண்டோம்.
இருப்பினும் இந்த சர்வாதிகார ஆட்சியில் எமது நிலத்தின் ஊடாக நெஞ்சில் ஏறி மிதிப்பது போன்று அடாத்தாக படையினரின் உதவியுடன் வீதி அமைக்கப்படுகின்றது.
கட்டுவன் மயிலிட்டி வீதியானது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி. ஆனால் எமது நிலத்தின் ஊடாக படையினரைக் கொண்டு சட்ட விரோதமாக சட்டப்படி எதனையும் பின்பற்றாமல் அடாத்தாக அமைக்கும் இந்த வீதி அகற்றப்பட்டே ஆக வேண்டும்.
இல்லையேல் இந்த வீதி திறப்பு விழாவிற்கு இடையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இதே வீதியில் ஜனநாயக வழியில் நடாத்துவதோடு சட்டப்படி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வோம். அரசியல் வழியிலும் அனைத்து தரப்பின் கவனத்திற்கு எமது எதிர்ப்பை தெரிவிப்போம்.
இவற்றை மீறி தார் வீதி அமைத்தால் அதற்கு எதிராக போராடவும் தயங்க மாட்டோம் ஏனெனில் இந்த அரசோ அல்லது வீதி அபிவிருத்தி அதிகார சபையோ சட்டத்தையும் பின்பற்றவில்லை, ஜனநாயகத்தையும் மதிக்கவில்லை – என்றார்.
#SriLankaNews