கேள்விக்குட்படுத்தப்படும் தமிழினத்தின் இருப்பு! – சிறிதரன் எம்.பி. ஆதங்கம்

IMG 20220317 WA0004

“எமது தமிழினத்தின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு பூநகரியில் நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்திடம் போகமாட்டோம் என்று மார்தட்டிய அரச தரப்பினர், இன்று சர்வதேச நாணய நிதியத்தின் காலடியில் வீழ்ந்துள்ளனர்.

நாடெங்கும் மக்கள் இன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்கிறார்கள். சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்கிறார்கள்.

அத்தியாவசியப் பொருட்களை வரிசையில் நின்றுதான் வாங்க வேண்டும் என்கின்ற நிலை இப்போது உருவாகியிருக்கின்றது. நாடு பொருளாதார நிலையில் அதளபாதாளத்துக்குச் சென்றுள்ளது.

இப்படி இக்கட்டான நேரத்திலும் எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டே செல்கின்றது. எங்களை நோக்கிப் புத்த கோயில்கள் வருகின்றன. எங்கள் இடங்களில் கொரோனாக் காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பயணத்தடைகளின்போது முளைத்த இராணுவச் சோதனைச் சாவடிகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.

வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றன தமிழர்களின் நிலங்களைப் பறித்து விவசாயம் செய்வதற்குத் தடையாக இருக்கின்றார்கள். முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ நியமனங்களில்தான் நாடு இன்று இவ்வாறான அழிவைச் சந்தித்துள்ளது” – என்றார்.

பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிறீரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன், பூநகரி பிரதேச சபையின் உப தவிசாளர் எமிலியாம்பிள்ளை, தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் செயலாளர் விஜயன், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணித் தலைவர் ஜோன் தனராஜ், பிரதேச அமைப்பாளர் குபேந்திரன், பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

#SriLankaNews

 

Exit mobile version