கரூர் சோகச் சம்பவம்: உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் விஜய் சந்திக்கிறார்!

25 68fc8c23901e1

கரூர் சம்பவம் இந்தியாவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

அவர்களின் குடும்பத்தினரை பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

த.வெ.க. சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார்.

மேலும் அவர்களது குடும்பத்தினருக்கு காணொளி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது விரைவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து கடந்த 17ஆம் திகதி விஜய் கரூருக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரண தொகை வழங்குவதாக கூறப்பட்ட நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெறவில்லை.

இதனிடையே கடந்த 18ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் நிவாரண தொகையானது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version