ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் நாமல் உரை – இங்கிலாந்தில் கொந்தளிக்கும் தமிழ் அமைப்புகள்!

image 1200x800 15 2

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பெப்ரவரி 25-ஆம் திகதி உலகப் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge Union) பல்கலைக்கழகங்களில் உரையாற்றவுள்ள நிலையில், அதற்கு இங்கிலாந்து வாழ் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இங்கிலாந்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர் சங்கங்கள் மற்றும் பிரிட்டன் தமிழ் இளைஞர் அமைப்பு (TYO UK) இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட இந்த அழைப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

“இனப்படுகொலை இயந்திரத்தின் வாரிசு” என நாமல் ராஜபக்சவைச் சாடியுள்ள அந்த அறிக்கை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் குற்றம் சாட்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இத்தகைய உயரிய மேடையை வழங்குவது, போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அவமானம் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், சட்டப் பரீட்சை மோசடி மற்றும் நிதி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள ஒருவரைப் பேச அனுமதிப்பது, பல்கலைக்கழகங்களின் நடுநிலைக் கொள்கைக்கே எதிரானது என மாணவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த அழைப்பின் மூலம் பிரிட்டிஷ் தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட காயங்களுக்குப் பல்கலைக்கழக நிர்வாகங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமல் ராஜபக்சவின் வருகைக்கு எதிராக அமைதியான முறையில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதோடு, மக்களின் வலியை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் தமிழ் அமைப்புகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. முன்னதாக 2010-இல் மஹிந்த ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு இத்தகைய போராட்டங்களால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version