இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை கொழும்பிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கையெழுத்து திரட்டப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எ.ஏ. சுமந்திரனின் ஏற்பாட்டில் இடம்பெறும் இதற்கான நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி இறுதியில் ஆரம்பமாகின்றது.
இந்நிலையில் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று முன்தினம் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
எனினும், நடைமுறையில் உள்ள சட்டத்துக்கும், புதிதாக முன்வைக்கப்பட்ட சட்ட திருத்தத்துக்கும் இடையில் பாரிய வித்தியாவசம் எதுவும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews