நிலையான அபிவிருத்தியே எமது கொள்கைக் கட்டமைப்பாகும். அதன்படி இயற்கைக்கு எதிராக செயற்படுவதை விடுத்து, அதனோடு இணைந்து செயற்பட வேண்டும். இதன் மூலம் நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சி ஒன்று உருவாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெரும் காலநிலை மாற்றம், என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் விசேட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நவீன, விஞ்ஞான பொறிமுறைகள் மற்றும் பண்டைய வழிமுறைகள் ஊடாக, சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே, தற்போது எமக்கு உள்ள சவாலாகக் காணப்படுகின்றது.
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்துக்கமைய, இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட தேசிய நிர்ணயங்கள் மற்றும் அபிலாஷைகள் நன்கு பிரதிபலிக்கின்றன.
இலங்கையில் விவசாயிகளிடையே, பல தசாப்தங்களாக சிறுநீரக நோய் நிலைமை பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக இரசாயனப் பசளையை அதிகளவில் பயன்படுத்துவதே காரணமாகும்.
இந்நிலையிலேயே இரசாயனப் பசளை இறக்குமதியைக் குறைப்பதற்கும், சேதன விவசாயத்தை அதிகளவில் ஊக்குவிப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்காகவே இந்தப் பூமியின் பாதுகாவலர்களாக நாம் அனைவரும் இன்று வாழ்ந்து வருகின்றோம். இயலுமான வகையில் அதற்குப் பங்களித்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. அந்த வகையில், அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப பரிமாற்றல்கள், திறன் அபிவிருத்தி, அபிவிருத்தி உதவிகள், முதலீடுகள் மற்றும் நிதி உதவிகள் உட்பட இயலுமான பங்களிப்புகளையும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
#srilanka