ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு சிறைச்சாலைக்குள் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சுரேன் ராகவன் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தார். டக்ளஸ் தேவானந்தா தனது அரசியல் பயணத்தில் பலமுறை எதிரிகளாலும் எதிர்க்கட்சிகளாலும் உயிராபத்துக்களை எதிர்கொண்டவர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது அவர் மகர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 1,000 கைதிகள் தங்கியிருக்க வேண்டிய அந்தச் சிறையில் தற்போது 3,000-க்கும் அதிகமான கைதிகள் இருப்பதாகத் தெரியவருகிறது. இத்தகைய அதிக நெரிசல் கொண்ட சூழலில், அவருடைய பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதால், அரசாங்கம் உடனடியாக அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்பு குறித்த இந்தக் கோரிக்கை அரசியல் மட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

