ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். (RSF) எனப்படும் துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த மோதல் போக்கு, கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உள்நாட்டுப் போராக வெடித்தது. 2.5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் இந்த உள்நாட்டுப் போரால் நாட்டில் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போரின் காரணமாகச் சுமார் 1.5 கோடி பேர் (15 மில்லியன்) தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறினர்.
இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை உருவானது. குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஒருவேளை உணவுக்கே வழியின்றித் தவித்து வருகின்றனர்.
உணவுப் பற்றாக்குறை மற்றும் நெருக்கடியின் காரணமாக அங்குள்ள கோர்டோபான் (Kordofan) பிராந்தியத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று சூடான் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

