“நாட்டின் நிதி நிலைவரம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தவில்லை. எனவே, அவரைச் சபைக்கு வந்து தெளிவுபடுத்துமாறு ஆணையிடுங்கள்.”
– இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.,
“நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. டிசம்பர் 10 ஆம் திகதியே நிதி அமைச்சர் சபையில் உரையாற்றினார். அதன்பின்னர் நிதி நிலைவரம் பற்றி இதுவரை தெளிவுபடுத்தவில்லை.
எனவே, நாடாளுமன்றம் வந்து தெளிவுபடுத்துமாறு, நிதி அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிடவேண்டும்” – என்றார்.
#SriLankaNews