‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிருடன் புதையுண்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எச்சங்களைக் கண்டறிய உதவுவதற்காக, சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய்களை அனுப்புமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் (EU) இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பேரிடர் மேலாண்மை மையத்தின் (DMC) அதிகாரி ஒருவர் இது குறித்துத் தெரிவிக்கையில் மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாகப் பெரும் ஆழத்தில் சிக்கியுள்ள உடல்களைக் கண்டுபிடிப்பது தற்போதைய நிலையில் பெரும் சவாலாக உள்ளது.
மனித எச்சங்களைக் கண்டறிவதில் அதிக வாசனை உணர்வு கொண்ட மற்றும் இதற்காகவே சிறப்பாகப் பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் உள்ளன. அவற்றின் உதவியுடன் தேடுதல் பணிகளைத் துரிதப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
கடந்த நவம்பர் 28 அன்று நிலத்தைக் கடந்த டிட்வா சூறாவளி, முன்னெப்போதும் இல்லாத வகையில் 500 மிமீ வரை மழைப்பொழிவை ஏற்படுத்தியது. இந்த அனர்த்தத்தினால் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பலர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இன்னும் காணாமல் போன நிலையில் உள்ளனர். அவர்களின் சரியான எண்ணிக்கை குறித்த விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தெளிவான பதில்களை வழங்கும் நோக்கில், இறந்ததாகக் கருதப்படுபவர்களின் எச்சங்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.