புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

Untitled 21

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் (SLAAP) தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதாரச் சூழலில் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விநியோகத்தை உறுதிப்படுத்த அனைத்து பண்ணைகளும் தமது முழுமையான கொள்ளளவிற்கு உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாகச் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் விலங்கு தீவனங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமை மற்றும் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஆகியவை கோழி இறைச்சி உற்பத்தியில் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 1,250 ரூபாய் என்ற மட்டத்தில் பேணுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் செலவு உயர்வு காரணமாக இந்த விலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் மாதத்தில் கோழி இறைச்சிக்கான கேள்வி (Demand) சாதாரணமாக உயர்வடையும் என்பதால், அந்தத் தேவையை ஈடுசெய்யும் வகையில் முட்டை மற்றும் இறைச்சி விநியோகத்தைச் சீராக முன்னெடுக்க விசேட வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கான மேலதிக செலவுகளை உற்பத்தியாளர்களே சுமக்க வேண்டியுள்ள போதிலும், தட்டுப்பாடு நிலவினால் மட்டுமே விலைகள் மேலும் உயரக்கூடும் என்பதால், தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதில் சங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

இறுதி விலையை உற்பத்தியாளர்கள் தீர்மானிப்பதை விட, சந்தையில் நிலவும் விநியோகமும் தேவையுமே (Supply and Demand) தீர்மானிப்பதாக அஜித் குணசேகர விளக்கமளித்தார். எவ்வாறாயினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் நியாயமான விலையில் கோழி இறைச்சியைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்யத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version