2026 பிரதான பரீட்சை திகதிகளில் மாற்றமில்லை: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதி!

Untitled 8

2026-ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில், கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்ட திகதிகளிலேயே எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நேற்று (மார்ச் 31, 2026) உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ கால அட்டவணையின்படி, 2026-ஆம் ஆண்டுக்கான பிரதான பரீட்சைகள் பின்வரும் திகதிகளில் ஆரம்பமாகவுள்ளன:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 2026 ஓகஸ்ட் 09

க.பொ.த உயர்தரப் பரீட்சை (A/L): 2026 ஓகஸ்ட் 10

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (O/L): 2026 டிசம்பர் 08

“கடந்த காலங்களில் பல்வேறு அசாதாரண சூழ்நிலைகளால் பரீட்சை திகதிகள் அடிக்கடி மாற்றமடைந்ததால் மாணவர்கள் மனரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதனைத் தவிர்க்கும் பொருட்டே, கடந்த 2025 செப்டம்பர் மாதமே 2026-க்கான திகதிகளை முன்கூட்டியே அறிவித்தோம். எனவே, மாணவர்கள் எவ்வித குழப்பமுமின்றி அந்தந்த திகதிகளுக்கு அமையத் தங்களது பாடவிதானங்களைத் திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும்,” என ஆணையாளர் நாயகம் வலியுறுத்தினார்.

மேலும், 2025-ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் (Practical Exams) எதிர்வரும் ஏப்ரல் 22 முதல் 30 வரை நாடு முழுவதும் உள்ள மத்திய நிலையங்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பரீட்சை விடைத்தாள்களின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் இன்று (ஏப்ரல் 01) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 30 முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், பெறுபேறுகளைக் காலதாமதமின்றி வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version