2025 ஆம் ஆண்டு, இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வருமானத்தை ஈட்டிய வருடமாக பதிவாகியுள்ளது என்றும், எதிர்பார்த்த வருமான இலக்கான 2115 பில்லியன் ரூபா வருமானத்தை தாண்டி, 300 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்துடன் 2026 ஆம் ஆண்டை ஆரம்பிக்க முடிந்துள்ளதாகவும் இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் எஸ்.பீ அருக்கொட தெரிவித்தார்.
சுங்கத் திணைக்களத்திற்கு இன்று காலை விஜயம் செய்த ஜனாதிபதி, அதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். 2022 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்கவும், அண்மைய அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ளவும் இந்த வருமானம் பாரிய பலமாக அமைந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஊழல்களைத் தடுக்கவும், சுங்க நடவடிக்கைகளில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்கவும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களை (Digitalization) விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினார்.
பொருட்கள் சோதனை செய்யும் கட்டமைப்பை நவீனமயமாக்குவது மற்றும் நேர்மையான நிறுவனக் கலாசாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. வருமானம் சேகரிப்பு, வர்த்தகத்தை இலகுபடுத்தல், சமூக பாதுகாப்பு மற்றும் நிறுவன அபிவிருத்தி ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் சுங்கத் திணைக்களம் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தவுள்ளது.
2026 ஆம் ஆண்டில் முழுமையான டிஜிட்டல் கட்டமைப்பைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
நாட்டின் ஸ்திரமின்மையை உருவாக்க முயலும் சக்திகளைத் தடுக்க, விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய நுழைவாயில்களில் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் பலப்படுத்துவது அவசியம் என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.