இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாகக் கருதப்படும் எம்.எஸ். தோனி, 2017-ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகியது அவர் எடுத்த தன்னிச்சையான முடிவு அல்ல என்றும், பிசிசிஐ (BCCI) தேர்வுக் குழு அவரை வற்புறுத்தியதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போதைய தேர்வுக் குழு உறுப்பினராக இருந்த ஜதின் பரஞ்ச்பே (Jatin Paranjpe) சமீபத்தில் ஒரு நேர்காணலில் இந்தப் பின்னணியைப் பகிர்ந்துள்ளார். 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தோனி நாக்பூரில் ரஞ்சி கோப்பை போட்டிக்காகப் பயிற்சியில் இருந்தபோது, தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மற்றும் ஜதின் ஆகியோர் அவரைச் சந்தித்துள்ளனர். “மஹி (தோனி), இப்போது நீங்கள் அடுத்தவரிடம் (விராட் கோலி) தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க இதுவே சரியான நேரம் என்று நாங்கள் நினைக்கிறோம்” என அவர்கள் நேரடியாகத் தெரிவித்துள்ளனர்.
தேர்வுக் குழுவின் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்ட தோனி, “அண்ணா, இது மிகச் சரியான முடிவு. என்னிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளார். அதற்கு பிரசாத், “நீங்கள் பதவியிலிருந்து விலகத் தயார் என்பதை எழுத்துப்பூர்வமாக (E-mail) எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்தே அன்றிரவு தோனி தனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்.
கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும், ஒரு வீரராக விராட் கோலிக்குத் தான் முழு ஆதரவு அளிப்பேன் என்றும், அவரைத் தனது சகோதரராகவே கருதுவதாகவும் தோனி அப்போது உறுதியளித்துள்ளார். 2019 உலகக் கோப்பைக்கு முன்பாக ஒரு புதிய கேப்டனை உருவாக்கி வலுவான அணியை அமைக்கும் நோக்கிலேயே பிசிசிஐ இந்தத் ‘துணிச்சலான’ முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தோனி போன்ற ஒரு ஜாம்பவானை பிசிசிஐ இவ்வளவு நேரடியாகப் பதவி விலகச் சொன்னது சரியா? என்ற விவாதம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

