நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் புதிய திகதிகள் தொடர்பான விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை (Sri Lanka Cricket – SLC) வெளியிட்டுள்ளது.
பிரதான கழகங்களுக்கு இடையிலான மூன்று நாள் கிரிக்கெட் போட்டி நாளை (டிசம்பர் 6, சனிக்கிழமை) தொடக்கம் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் கடந்த நவம்பர் 28ஆம் திகதியே ஆரம்பிக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2025–2026 பிரதான கழகங்களுக்கு இடையிலான 3 நாள் கிரிக்கெட் தொடரில் 14 கழகங்கள் பங்கேற்கவுள்ளன.
ஏழு அணிகள் கொண்ட இரு குழுக்களாக ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நடைபெறும். ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் ஒரு அணி மற்ற அணியுடன் ஒருமுறை மோதும்.
இரு குழுக்களிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.