ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) ஆகிய அணிகள் தமது நீண்டகாலச் சொந்த மைதானங்களிலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2025 தொடரில் ஆர்.சி.பி முதன்முறையாகச் செம்பியன் பட்டம் வென்றதைக் கொண்டாடியபோது, பெங்களூருவில் ஏற்பட்ட சன நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட அவப்பெயர் காரணமாகவே அணி நிர்வாகம் சின்னசுவாமி மைதானத்தைத் தவிர்க்க முடிவு செய்துள்ளது.
கர்நாடக கிரிக்கெட் சங்கத்தை இதுவரையில் ஆர்.சி.பி அணுகவில்லை. அதற்குப் பதிலாகச் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மைதானத்தை ஆர்.சி.பி தனது புதிய தளமாக மாற்ற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர், 2025 தொடரின் போது அணி மீது ஆட்ட நிர்ணய (Match-fixing) குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டால் ஏற்பட்ட முறுகல் நிலையே மைதான மாற்றத்திற்குக் காரணமாகும்.
ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்திலிருந்து வெளியேறி, 2026 போட்டிகளை மகாராஷ்டிராவின் புனே (Pune) மைதானத்தில் நடத்த ராஜஸ்தான் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
புனே மைதானமானது ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளுக்குத் தற்காலிகத் தளமாக இருந்துள்ளது. ஆர்.சி.பி மற்றும் ராஜஸ்தான் அணிகளின் இந்த அதிரடி மாற்றங்கள் அந்தந்த மாநில ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

