மாத்தறை – தெவிநுவர பிரதேசத்தில் செயல்படுவதாகக் கூறப்படும் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் தற்போது அதிக கவனம் செலுத்தி, விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அண்மையில் தெற்கு கடற்பரப்பில் 54 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் தொகையை இலங்கைக்குக் கொண்டு வரப் பிரதானமாகச் செயல்பட்டவர் தெவிநுவர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் தற்போது தென் கொரியாவில் வசித்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த நபர் இதற்கு முன்னர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்படவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர் தற்போது இந்தப் பிரதேசத்தில் போதைப்பொருள் வலையமைப்பில் புதிதாக இணைந்து கொண்டவரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட 839 கிலோகிராம் போதைப்பொருள் தொகையும் தெவிநுவர பிரதேசத்தை மையமாகக் கொண்ட கடத்தல்காரர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதால், இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் அதிக அவதானம் செலுத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் மேற்கொண்ட விசாரணைகளில், தெவிநுவர பிரதேசத்தில் உள்ள ஒருவர் வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இவ்வாறு படகு மூலம் போதைப்பொருள் தொகையைக் கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. பலநாள் மீன்பிடிப் படகுகள் மூலம் இலங்கையின் தெற்குப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை கடற்படைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.