விண்வெளி வீரருக்குத் தீவிர உடல்நலக் குறைவு: அவசரமாகப் பூமிக்குத் திரும்பியது SpaceX விண்கலம்!

AP26015371678237 1000x689 1

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருந்த விண்வெளி வீரர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் மற்றும் தீவிர உடல்நலக் குறைவு காரணமாக, அங்கிருந்த நான்கு விண்வெளி வீரர்கள் நேற்றைய தினம் அவசரமாகப் பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

SpaceX நிறுவனத்தின் ‘எண்டெவர்’ (Endeavor) விண்கலம் மூலம் இவர்கள் பூமிக்கு அழைத்து வரப்பட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த இருவர், ஜப்பான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் நால்வர் இதில் பயணித்தனர்.

சுமார் 10.5 மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, வியாழக்கிழமை அதிகாலை கலிபோர்னியா கடற்கரைக்கு அப்பால் பசிபிக் கடலில் விண்கலம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

விண்வெளி வீரர் ஒருவரின் உடல்நிலை காரணமாக, திட்டமிடப்பட்ட ஒரு பணிக்காலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு வீரர்கள் அவசரமாகத் திரும்பியிருப்பது நாசா (NASA) வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இவர்கள் மொத்தம் 167 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட வீரரின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் மருத்துவ இரகசியத்தன்மை கருதி, அவர் யார்? அல்லது அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? போன்ற விபரங்களை வெளியிட நாசா மறுத்துவிட்டது.

இது குறித்து விண்வெளி நிலையத் தளபதி மைக் ஃபிங்கே சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில், “நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். ஆனால், பூமியில் முழுமையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதே சரியானது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த குழுவினர் (Crew-12) பெப்ரவரி நடுப்பகுதியில் விண்வெளிக்கு அனுப்பப்படும் வரை, தற்போது விண்வெளி நிலையத்தில் ஒரு அமெரிக்க வீரரும், இரண்டு ரஷ்ய வீரர்களும் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version