தொடர்ச்சியாகத் தனது மனைவியைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டு வந்த 66 வயது பௌத்த துறவி ஒருவருக்கு, சோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் ஓராண்டுச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2024 டிசம்பர் 20-ஆம் திகதி, மதுபோதையில் இருந்த அந்தத் துறவி, தனது மனைவியின் கழுத்தில் தாக்கியதோடு, தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். மேலும், இரண்டு கத்திகளைக் காட்டி அவரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இந்தத் துறவி இதற்கு முன்னரும் வன்முறை மற்றும் மிரட்டல் தொடர்பான குற்றங்களுக்காக 39 முறை தண்டிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2005-ஆம் ஆண்டில் 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தும் அவர் திருந்தவில்லை.
பாதிக்கப்பட்ட பெண் (முன்னாள் மனைவி), தனது கணவர் மீது கருணை காட்டும்படி நீதிமன்றத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தார். 2022-இல் விவாகரத்து பெற்ற பின்னரும் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மீண்டும் அத்துறவி வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
நீதிமன்றம் தனது தீர்ப்பில்”குற்றவாளி பலமுறை தண்டிக்கப்பட்டும் தன்னை மாற்றிக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். எனவே, இம்முறை மனைவியின் கருணைக் கோரிக்கையை ஏற்க முடியாது.”
ஒரு துறவியாக இருந்து கொண்டு மது அருந்திவிட்டு, குடும்ப வன்முறையில் ஈடுபட்டு, பலமுறை சிறை சென்ற பின்னரும் மீண்டும் அதே குற்றத்தைச் செய்தது தென்கொரிய சமூகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.