2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கைகூடாததால், அத்தோடு தனது அரசியல் வாழ்வும் முடிந்துவிட்டது என எண்ணி, தனது சொந்த ஊரான தங்காலைக்குச்சென்று குடும்பத்தோடு குடியேறினார் மஹிந்த ராஜபக்ச.
சிறிது காலம் பொறுமை காத்தார். எனினும், தமது அரசியல் வாழ்வுக்கு மஹிந்த என்ற நாமம் அவசியம் என்பதை உணர்ந்த விமல், கம்மன்பில போன்றவர்கள் போன்றவர்கள் மஹிந்தவை சும்மா இருக்கவிடவில்லை.
புலிகளுக்கு சமாதி கட்டிய போர்வெற்றி நாயகன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் அனுதாப அலையை உருவாக்கினர். இதனால் வெகுண்டெழுந்த மக்கள், அணிதிரண்டு சென்று மஹிந்தவை சந்தித்து ஆறுதல் கூறினர்.
காலம் காற்றாக பறந்தது. நல்லாட்சிக்கு பதவிக்கு வந்து ஈராண்டுகளும் முடிந்தன.இந்நிலையில் ‘மஹிந்த சூறாவளி’ எனும் பாரியதொரு பரப்புரைக் கூட்டத்தை விமல், கம்மன்பில போன்றவர்கள் ஆரம்பித்தனர். மஹிந்தவும் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். ஆதரவு வலுத்தது. அதுவே பின்நாளில் பாரிய மக்கள் சக்தியாக மாறி, ஆட்சி மாற்றம்வரை அழைத்துச்சென்றது.
இதேபாணியில் அதிரடி வியூகமொன்றை அமைத்து, ராஜபக்ச படையனியை நிலைகுலைய வைக்கும் தாக்குதல் சமரை இன்று வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி.
பொருட்களின் விலையேற்றம், மின்வெட்டு, டீசல் தட்டுப்பாடு, டொலர் தட்டுப்பாடு என பிரச்சினைகள் தாண்டவமாடிவருவதால், அரசுமீது மக்கள் கடும் சீற்றத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, மக்கள் படையையும் இந்த சமரில் இணைத்துக்கொண்டது சஜித் அணி. இது ராஜபக்ச தரப்புக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகின்றது.
இத்துடன் சஜித் அணியின் தாக்குதல் நின்றுவிடப்போவதில்லை, இலக்கை அடையும்வரை அது ஓயாத அலையாக தொடரவுள்ளது. குறிப்பாக மாவட்ட மட்டத்திலும் பாரிய பரப்புரைக் கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. அரசின் கீழ் மட்ட அரசியல் இயந்திரத்தையும் தம்பக்கம் வளைத்துபோடும் நோக்கிலேயே இதற்கான வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முதல் அடியே தலைநகரில் – அதுவும் ஜனாதிபதியின் கோட்டைக்கு முன்பாகவே இடம்பெற்றுள்ளமை சஜித் படையணியின் வலிமையை வெளிப்படுத்துவதாக அரசியில் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு நோக்கி வந்த மக்கள், அரசுக்கு எதிராக விண்ணதிர கோஷங்களை எழுப்பினர். ஜனாதிபதி வீடு செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இரு பிரதான இடங்களில் அணிதிரண்டு ஜனாதிபதி செலயகத்தை நோக்கி பேரணியை ஆரம்பித்த போராட்டக்காரர்கள், செல்லும் வழியில் சவப்பெட்டிகளை சுமந்துக்கொண்டும், ஆட்சியாளர்களின் கொடும்பாவிகளை எரித்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இறுதியாக ஜனாதிபதி செலயக வளாகத்தில் அணிதிரண்டனர். இதனால் அந்த வளாகத்தை சூழ உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். கடும் பாதுகாப்பையும்மீறி, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட முற்பட்டதால் பதற்ற நிலை உருவானது.
மறுபுறத்தில் காலி முகத்திடல் ஊடான போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்தது. புறக்கோட்டை பகுதியின் இயல்பு நிலை ஸ்தம்பிதமடைந்தது.
எதிர்ப்பார்த்த அளவை விடவும் மக்கள் வெள்ளம் திரண்டமால், இப்போராட்டம் பெரும் வெற்றி என சஜித் அணி மார்தட்டியுள்ளது. அத்துடன், ஜனநாயக வழியில் இந்த அரசு விரட்டியடிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அறிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் உரையாற்றிய சஜித்,
” மக்களை வதைக்கும் இந்த சூழ்ச்சிக்கார ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை ஜனநாயக வழியிலான எமது போராட்டம் தொடரும்.”என சூளுரைத்தார்.
” தடைகளுக்கு மத்தியிலும் அச்சமின்றி, துணிவுடன் மக்கள் அணிதிரண்டுள்ளனர். கடந்த இரு வருடங்களில் மக்கள் எல்லா வழிகளிலும் துன்பப்பட்டனர். இனியும் அந்த துன்பத்தை தாங்கிக்கொண்டிருக்க முடியாது. எனவே, மக்களை இந்நிலைமைக்கு கொண்டுவந்த சூழ்ச்சிக்காரர்கள்தான் ராஜபக்ச அரசு, ராஜபக்ச குடும்பம். அந்த ஆட்சியை விரட்டியடிக்கவே நாம் அணிதிரண்டுள்ளோம். அந்த இலக்கை அடையும்வரை அறவழியில் எமது போராட்டம் தொடரும்.
ஊழல் அற்ற ஆட்சியையே நாம் உருவாக்குவோம். எவருடனும் டீல் இருக்காது. மக்களுடன்தான் எமக்கு டீல்.” – என்றும் குறிப்பிட்டார்.
#Artical