இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

Untitled 1

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக் குறைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இது குறித்துத் தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய நுகர்வோரின் சுமையைக் குறைக்கும் நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்திய அரசாங்கம் நேற்று (மார்ச் 26, 2026) பெற்றோல் மீதான சிறப்பு கூடுதல் உற்பத்தி வரியை (Special Additional Excise Duty) 13 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகக் குறைத்துள்ளதுடன், டீசல் மீதான 10 ரூபாய் வரியை முழுமையாக நீக்கியுள்ளது. “இந்திய நுகர்வோர் எதிர்கொள்ளும் கஷ்டங்களைக் குறைக்க மோடி அரசாங்கம் இவ்வாறான தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் விலையைக் குறைப்பதற்கும் இதுவே மிகப்பொடுத்தமான தருணம்” எனச் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில், அரசாங்கம் வரிகளைக் குறைக்காமல் இருப்பதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பதைக் காரணம் காட்டி உள்நாட்டில் விலைகளை உயர்த்துவதை விடுத்து, வரிச் சலுகைகள் மூலம் மக்களுக்குப் பலனைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறான வரிக்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைத் திரட்டிப் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version