300 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் அபின் தீயிட்டு அழிப்பு!

25 67cef1734b681

இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட சுமார் 300 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் அபின் வகை போதைப்பொருட்கள், இன்று (02) வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள அதிஉயர் வெப்பத் தகன உலையில் இட்டு அழிக்கப்பட்டன.

கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மட்டக்களப்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடற்படையினரின் உதவியுடன் இந்தப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சுமார் 106 கிலோ 248 கிராம் ஹெரோயின் மற்றும் 90.5 கிராம் அபின் ஆகியவை இவ்வாறு அழிக்கப்பட்டன.
குறித்த போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவற்றை அழிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட இந்தப் போதைப்பொருட்கள், வனாத்தவில்லுவ லெக்டோ (Lacto) தோட்டத்தில் அமைந்துள்ள விசேட உலையில் எரிக்கப்பட்டன.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெற்றது. போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.என்.எம்.சி. ஹேரத் ஆகியோரின் வழிகாட்டலில் அதிகாரிகள் இதனைச் செயல்படுத்தினர்.

இந்த அழிப்பு நடவடிக்கையின் போது, தகன உலை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version