நாட்டில் நிலவும் காலநிலை மாற்றத்தின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் கடற்பரப்பு இன்று மிகக்கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருகோணமலை டச் பே (Dutch Bay) கடற்கரையில் அலைகளின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாகக் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி காவல்துறை உயிர்காப்புப் பிரிவினரால் சிவப்பு எச்சரிக்கைக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் கடல் நீர் அதிகப்படியாக உள்வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். வீரநகர் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள், தமது வாழ்வாதாரமான படகுகளைப் பாதுகாக்கப் போதிய இடவசதி இல்லாததால், அவற்றை வீதியோரங்களுக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர்.
படகுகளை வீதியோரங்களுக்குக் கொண்டு வருவது சிரமமாக இருந்தாலும், வேறு வழியின்றிப் பாதுகாப்பிற்காக இவ்வாறு செய்வதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எதிர்வரும் ஜனவரி 10-ஆம் திகதிக்குப் பின்னரே கடலின் தன்மையை ஆராய்ந்து மீன்பிடி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.