தையிட்டி விகாரை விவகாரம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) தொடர்பில் அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் நாயகம் அருள் ஜெயந்திரன் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் பின்வருமாறு தெரிவித்தார்:
தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டுவதற்குத் தமது தரப்பு தயாராகவே உள்ளது. ஆனால், தற்போது சட்டமுரணாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பூர்வீக காணிகளை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
போராட்டத்தின் நோக்கம்: மக்கள் விகாரையை எதிர்க்கவில்லை, மாறாகத் தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்ட விதத்தையே எதிர்க்கின்றனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
திஸ்ஸ விகாரை, செம்மணி விவகாரம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றுக்குத் தீர்வை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம், தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது.
கடந்த கால அரசாங்கங்களைப் போலன்றி, இனவாதத்தைத் தடுக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றி அமுல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் தற்போது எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தலும் இல்லை எனத் தெரிவித்த அவர் “யாழ்ப்பாணத்திற்கு வரும் ஜனாதிபதி, எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பற்ற முறையில் வீதிகளில் நடந்து செல்ல முடியுமான சூழல் இருக்கும்போது, இன்னும் எதற்காகப் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளது? அதற்கு மாற்றீடான சட்டம் கொண்டுவரப்பட வேண்டிய அவசியம் என்ன?” என அவர் கேள்வி எழுப்பினார்.